search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும் திறப்பு"

    • சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தது.
    • கடையை மூட வேண்டும் என்றும் காமலாபுரம் ஊராட்சியில் தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தின் வழியாக செல்லும் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த 3 கடைகளும் அரசு விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியே செயல்பட்டு வருவதாகவும், கடையை மூட வேண்டும் என்றும் காமலாபுரம் ஊராட்சியில் தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும், தொடர்ந்து சாலை விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் அருகிலேயே காமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. சாலையை ஒட்டியே மது விற்பனை நடைபெறுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இங்குள்ள 3 மதுக்கடைகளிலும் தினமும் சராசரியாக 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதுபானம் விற்பனை செய்வதால் கடையை அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், காமலாபுரத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மூடப்பட்டது. அதிகாரிகள் சொன்னதால் கடையை மூடியதாக ஊழியர்கள் கூறினர். இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இந்தநிலையில், கடந்த 20 நாட்களாக மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீண்டும் மாணவ மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவதுடன், விபத்துக்கள் அதிகமாகும் என்றும் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    அதனால், இங்குள்ள மதுக்கடையை நிரந்தமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது ஒருசில நிர்வாக காரணங்களால் மூடப்பட்ட கடை தற்போது திறக்கப் பட்டதாக தெரிவித்தனர்.

    ×